சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், வடசென்னை வளர்த்த சென்னையாக மாற்றுவதற்கு இந்த பெரியார் மருத்துவமனை ஒரு மைல் கல் ஆகும். இந்த மருத்துவமனைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சேகர்பாபு என்னிடம் கேட்டபோது பெரியார் நகரில் இருப்பதால் அவரின் பெயரை வைக்கலாம் என்று கூறினேன். ஏனென்றால் சமூகத்தில் உள்ள பிணிகளுக்கு மருத்துவம் பார்த்த சமூகம் மருத்துவர் பெரியார் தான். அவருடைய பெயரை இந்த மருத்துவமனைக்கு சூட்டியதில் அவரின் பேரனாக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளுக்கு அதிகாரத்தில் பங்களிக்க அவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த ஒரு அறிவிப்பை வெளியிட போகிறேன்.  அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கென உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி மன்றங்களில் நியமன முறையில் பிரதிநிதித்துவம் வழங்கும் விதமாக தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ஆகியவற்றில் வருகின்ற சட்டமன்ற கூட்டுத் தொடரில் அதற்குரிய சட்ட திருத்தம் கொண்டு வரப்படும். இதன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் இடம் பெறுவது உறுதி செய்யப்படும். அவர்களின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.