அமெரிக்காவின் தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், வீணாகும் பிளாஸ்டிக் மற்றும் விவசாயக் கழிவுகளைப் பயன்படுத்தி உணவுப் பொருளை உருவாக்கும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் மக்காச்சோளத் தண்டுகள் போன்ற கழிவுகளைச் செயலாக்கி, அவற்றை நுண்ணுயிர்கள் பயன்படுத்தக்கூடிய சிறிய வேதிப்பொருள் கூறுகளாக மாற்றுகின்றனர். பின்னர் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஈஸ்ட் மூலம் அந்தக் கூறுகளைப் பயன்படுத்தி புரதம், கொழுப்பு உள்ளிட்ட ஊட்டச்சத்துகளை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த பரிசோதனை உணவுக்கு ‘மைக்ரோபைட்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த செயல்முறையில் முதலில் கழிவுப் பொருள்கள் வெப்பம் மற்றும் வேதியியல் செயல்முறை மூலம் உடைக்கப்படுகின்றன. அதன்பின், மரபணு திருத்த தொழில்நுட்பம் மூலம் மாற்றியமைக்கப்பட்ட ஈஸ்ட்டுக்கு இந்தப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. அந்த ஈஸ்ட் அவற்றை மாற்றியமைத்து மனிதர்களுக்குத் தேவையான சில ஊட்டச்சத்துகள் மற்றும் பிற பயனுள்ள சேர்மங்களை உருவாக்குகிறது. மேலும், வெண்ணிலா சுவையை வழங்கக்கூடிய சேர்மம் மற்றும் உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படும் பீட்டா கரோட்டின் போன்ற பொருள்களும் உருவாகலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவற்றுடன் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் இனிப்புப் பொருள்களைச் சேர்த்து உணவுப் பொருளாக வடிவமைக்கப்படுகிறது.
இவ்வாறு தயாரிக்கப்படும் கலவையை முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பம் மூலம் பிஸ்கட் போன்ற வடிவத்தில் உருவாக்குகின்றனர். இந்தப் புதிய முயற்சி ஒருபுறம் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவை குறைக்கவும், மறுபுறம் எதிர்கால உணவுத் தேவைகளுக்கு மாற்று வழிகளை ஆராயவும் உதவக்கூடும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஆனால் இது இன்னும் ஆய்வக அளவிலான பரிசோதனையாகவே உள்ளது. தயாரிக்கப்பட்ட ‘மைக்ரோபைட்ஸ்’ உண்மையில் மனிதர்கள் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானதா என்பது குறித்து தேவையான ஆய்வுகள் மற்றும் நிறுவன அனுமதிகள் இன்னும் பெறப்படவில்லை.
இதனால், தற்போது ஆராய்ச்சியாளர்களே இந்த உணவை சாப்பிட்டு பரிசோதிக்கவில்லை. தொழில்நுட்பத்தை பெரிய அளவில் பயன்படுத்துவதற்கு உற்பத்தி, பாதுகாப்பு மற்றும் செலவு உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், பிளாஸ்டிக்கிலிருந்து பெறப்பட்ட பொருள்களை உணவாக எடுத்துக்கொள்வது குறித்து பொதுமக்களிடம் இருக்கும் தயக்கமும் முக்கிய தடையாக இருக்கலாம். எனவே, “பிளாஸ்டிக்கில் இருந்து பிஸ்கட்” என்ற இந்த முயற்சி தற்போது சுவைக்கத் தயாரான உணவாக அல்லாமல், எதிர்காலத்துக்கான ஒரு பரிசோதனை அறிவியல் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
