இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் விடுவிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்குப் பதிலாக, ஐபிஎல் தொடர்களில் கேப்டனாக முத்திரை பதித்த ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
ஐபிஎல் 2026 தொடருக்குப் பிறகு இந்திய அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள உள்ளது. இதற்கான அணியைத் தேர்வு செய்யும் கூட்டத்தில் சூர்யகுமாரின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம். 2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றிருந்தாலும், அந்தத் தொடரில் சூர்யகுமாரின் பேட்டிங் திருப்திகரமாக இல்லை என்பதே தேர்வாளர்களின் கவலையாக உள்ளது. உலகக் கோப்பையில் அவர் எடுத்த 242 ரன்களில், 84 ரன்கள் அமெரிக்காவிற்கு எதிரான ஒரு போட்டியில் எடுக்கப்பட்டவை. மற்ற முக்கியப் போட்டிகளில் அவர் சோபிக்கத் தவறியது பிசிசிஐ வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில காலமாக சூர்யகுமார் யாதவ் தனது வலது மணிக்கட்டில் நிலவும் கடுமையான வலியுடனேயே விளையாடி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் பேட்டிங் செய்வதற்கு முன்பாக மருத்துவக் குழுவின் உதவியுடன் மணிக்கட்டில் பிரத்யேக டேப் மற்றும் பாதுகாப்புக் கவசங்களை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த காயம் அவரது இயல்பான ஆட்டத்தைப் பாதிப்பதாகக் கருதப்படுகிறது. கேப்டனாக 76.92 சதவீத வெற்றி விகிதத்தைக் கொண்டிருந்தாலும், 35 வயதாகும் அவரது உடற்தகுதி மற்றும் பேட்டிங் ஃபார்ம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாற்றத்தை நோக்கி தேர்வாளர்கள் நகரத் திட்டமிட்டுள்ளனர்.
2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளைக் கருத்தில் கொண்டு, நீண்ட காலத் திட்டமாக புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ விரும்புகிறது. சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தாலும், ஐபிஎல் தொடரில் வெவ்வேறு அணிகளை வெற்றிகரமாக வழிநடத்திய அனுபவம் கொண்ட ஸ்ரேயாஸ் ஐயருக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
