மும்பை அணி வீரர் ரோஹித் சர்மா, தனது அதிரடி பேட்டிங் மற்றும் கேப்டன்சிக்கு எவ்வளவு புகழ்பெற்றவரோ, அதே அளவு தனது ‘மறதி’க்கும் பெயர் பெற்றவர். பாஸ்போர்ட், செல்போன், மோதிரம் என எதையாவது மறந்து வைக்கும் ரோஹித்தின் புதிய ‘மறதி’ கதை ஒன்றை மும்பை இந்தியன்ஸ் வீரர் திலக் வர்மா பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் காயத்திலிருந்து மீண்டு வந்து 84 ரன்கள் குவித்து அசத்திய ரோஹித் சர்மா, தனது அணியினருடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய திலக் வர்மா, மும்பை அணி ஜாம்நகருக்குச் சுற்றுலா சென்றபோது நடந்த ஒரு சம்பவத்தைக் கூறினார்.

 

View this post on Instagram

 

A post shared by Rohit Sharma Fanpage 🐐 (@264__ro)

“ஜாம்நகரில் இருந்தபோது நான் ரோஹித் பாய்க்கு  தொடர்ந்து போன் செய்துகொண்டே இருந்தேன். ஆனால் அவர் எடுக்கவே இல்லை. பிறகு நேரில் சந்தித்து கேட்டபோது, ‘அடப்போடா திலக்.. நான் போனை வீட்டிலேயே மறந்து வச்சுட்டு வந்துட்டேன்’ என்று கூலாகச் சொன்னார்,” என திலக் வர்மா அந்த ரகசியத்தை உடைக்க, அரங்கம் சிரிப்பால் நிறைந்தது.

உடனே மைக்கைப் பிடித்த ரோஹித் சர்மா, தனதுக்கே உரிய பாணியில் பதில் அளித்தார். “ஆமாம், நான் விஷயங்களை மறந்து விடுகிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதில் என்ன இருக்கிறது? இங்கே உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருக்கும் இந்த மக்கள் எல்லோருமே வாழ்க்கையில் எதையாவது ஒன்றை மறந்து கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று அவர் கூற, ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

காயத்திலிருந்து மீண்டு ரோஹித் சர்மா ஃபார்முக்கு வந்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இருப்பினும், பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல வேண்டுமானால், மும்பை அணி தனது அடுத்த நான்கு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.