தமிழ்நாட்டில் பெற்றோர்கள் இருவரையும் அல்லது ஒருவரை இழந்து மற்றொருவரால் பராமரிக்க இயலாத நிலையிலுள்ள குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, ‘அன்புக்கரங்கள்’ என்ற மாபெரும் நிதியுதவித் திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ல் துவங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், தகுதியான ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்கள் 18 வயதை அடையும் வரை மாதம் ₹.2,000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதனால், வறுமையின் காரணமாகக் கல்வி தடைபடும் அபாயத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட அளவில் இத்திட்டத்திற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களது குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் போன்ற அத்தியாவசிய ஆவணங்களுடன், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக அரசு முன்னெடுத்துள்ள இந்த உதவி, பெற்றோரை இழந்த பிள்ளைகளின் எதிர்காலக் கல்விக்குக் கலங்கரை விளக்கமாக அமையும் என்று கல்வி மற்றும் சமூக நல ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
