பெங்களூருவில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் உருவாக்கியுள்ள  ஹெல்மெட்’ சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. சாலையில் விதிகளை மீறுபவர்களைக் கண்டு அதிருப்தியடைந்த பங்கஜ் தன்வார் என்ற இளைஞர், தனது ஹெல்மெட்டில் செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராவைப் பொருத்தியுள்ளார்.

இந்தச் சாதனம் சிக்னலை மீறுவது, ஹெல்மெட் அணியாமல் செல்வது மற்றும் தவறான திசையில் வாகனத்தை ஓட்டுவது போன்ற விதிமீறல்களைத் தானாகவே கண்டறிந்து, சம்பந்தப்பட்ட வாகனத்தின் எண் மற்றும் இருப்பிடத்துடன் கூடிய ஆதாரத்தைப் போக்குவரத்து போலீசாருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவிடும். சுமார் 4,000 ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த நூதன முயற்சிக்கு நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த ‘ஹெல்மெட்’ தொழில்நுட்பம் பெங்களூரு நகர போக்குவரத்து போலீசாரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாதுகாப்பான சாலைப் பயணத்திற்கு இந்த முயற்சி மிகவும் புதுமையானது என்று பாராட்டியுள்ள காவல்துறை ஆணையர் அலுவலகம், இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை நேரில் விளக்க பங்கஜிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் சாதாரண வெப்கேம் மற்றும் ராஸ்பெர்ரி பை கருவியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சாதனம், எதிர்காலத்தில் சாலைப் பாதுகாப்பில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஒரு தனிநபர் பொதுமக்களைக் கண்காணிப்பது தனிநபர் சுதந்திரத்திற்கு எதிரானது என்ற விவாதங்களும் இணையத்தில் எழுந்துள்ளன.