ஆதார் அட்டை இன்று வெறும் அடையாள ஆவணமாக மட்டும் இல்லாமல், அன்றாட வாழ்வின் முக்கியமான பகுதியாக மாறியுள்ளது. அரசுத் திட்டங்கள் முதல் தனியார் நிறுவனங்கள் வரை, பல்வேறு சேவைகள் வழங்குவதில் ஆதார் கட்டாய ஆவணமாக உள்ளது.

இந்நிலையில் இந்திய இரயில்வே தகவல் தொழில்நுட்ப கழகம் (IRCTC) தளத்தில், அக்டோபர் 1 முதல் ரயில்வே டிக்கெட் முன்பதிவுக்கு பயணிகளின் ஆதார் எண் கட்டாயமாக்கியுள்ளது. போலி முன்பதிவு, அடையாள மோசடி, மற்றும் டிக்கெட் பதுக்கலை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எரிவாயு மானியம், கல்வி உதவித்தொகை, விவசாய நிதி, ரேஷன் ஆகியவைகளில் ஆதார் எண்ணை இணைக்கும் மூலம், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக மானிய தொகை செலுத்தப்படுகிறது. இதனை நேரடி நலன் பரிமாற்றம் (DBT) என அரசு குறிப்பிடுகிறது. இது மூலமாக முறைகேடுகள் குறைந்து, பயனாளிகளுக்கு நேரடியாக நன்மை கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

வருமான வரி தாக்கல் மற்றும் நிதி முறைகள் தொடர்பான ஊழல்களை தடுக்கும் வகையில், ஆதார் எண்ணை PAN கார்டுடன் இணைக்க அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம் போலி PAN கார்டுகள், வரி ஏய்ப்புகள் குறைந்துள்ளன. வருமான வரி தாக்கல் செய்யும் போது OTP மூலம் ஆதார் அடிப்படையில் சரிபார்ப்பு நடைமுறையில் உள்ளது.

ஆதாரின் e-KYC முறைமையை பல நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. இதன் மூலம் வங்கி கணக்கு திறத்தல், சிம் கார்டு பெறுதல், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, கடன் பெறுதல் ஆகியவை சுலபமாகி உள்ளன. இதற்கு முன் பல ஆவணங்கள் தேவைப்பட்டாலும், தற்போது ஆதார் அடிப்படையில் சில நிமிடங்களில் இவை முடிகின்றன.

ஆதார் அட்டை, முகவரிச் சான்றாகவும் பல இடங்களில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பாஸ்போர்ட் விண்ணப்பம், எரிவாயு இணைப்பு, கல்வி சேர்க்கை போன்றவற்றில் முக்கிய ஆவணமாக செயல்படுகிறது. அதில் உள்ள QR குறியீடு மற்றும் பயோமெட்ரிக் தகவல்கள் மூலம் பயனர் முகவரி மற்றும் அடையாளம் உறுதி செய்யப்படுகிறது.

மேலும் சுருக்கமாகச் சொல்வதானால், ஆதார் அட்டை இப்போது நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஆவணமாகியுள்ளது. அரசுத் திட்டங்களின் முழுமையான பயனை பெறுவதற்கும், தனிப்பட்ட நிதி சேவைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆதார் அடிப்படை ஆதாரமாகவும், பாதுகாப்பான வழிகாட்டியாகவும் மாறியுள்ளது.