திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சித் தலைவராகவும், அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்த நிலோபர் கபில், தற்போது அதிமுகவிலிருந்து விலகியுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதில் இருந்தே கட்சித் தலைமையுடன் அதிருப்தியில் இருந்த அவர், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.

ஒருகட்டத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் கட்சியில் இணைந்த போதிலும், அவருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதனால் தனது அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, எடப்பாடி பழனிசாமிக்கு விலகல் கடிதத்தை அனுப்பிவிட்டு அதிமுகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளார்.

தற்போது திமுகவில் இணையத் திட்டமிட்டுள்ள நிலோபர் கபில், திருப்பத்தூரில் நடைபெறும் திமுக மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைய உள்ளார்.

ஏற்கனவே அதிமுகவின் முக்கிய நிர்வாகியான அன்வர் ராஜா திமுகவில் இணைந்த நிலையில், அவரைத் தொடர்ந்து நிலோபர் கபிலும் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அமைச்சராக இருந்தபோது சில சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், தற்போது தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்து புதிய அரசியல் பயணத்தைத் தொடங்க அவர் தயாராகி வருகிறார்.