தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மிகுந்த கவலையளிப்பதாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
2024-ஆம் ஆண்டில் மட்டும் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 3,407-ல் இருந்து 5,319-ஆகவும், பாலியல் வன்கொடுமை வழக்குகள் 406-ல் இருந்து 471-ஆகவும் உயர்ந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த புள்ளிவிவரங்கள் பெண்களின் பாதுகாப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே காட்டுகிறது என்றும், இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் பெரும்பாலும் மதுபோதையில் இருப்பவர்களாலேயே நிகழ்கின்றன என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்ததை திருமாவளவன் நினைவூட்டியுள்ளார். எனவே, இனியும் தாமதிக்காமல், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்த, பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
