பாகிஸ்தான் வெள்ளை-பந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான மைக் ஹெஸன், அந்த அணியின் தலைமைத்துவ கலாச்சாரத்தை மாற்றுவதற்கான புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நீண்டகாலமாக கேப்டனை மட்டுமே மையமாகக் கொண்டு முடிவுகள் எடுக்கப்படும் வழக்கத்தை மாற்றி, கூட்டுத் தலைமைத்துவ முறையைக் கொண்டுவர அவர் திட்டமிட்டுள்ளார். அணியில் கேப்டன் பதவி மாறினாலும் பின்னடைவு ஏற்படாமல் இருக்க, ஒரே நேரத்தில் பல தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பது அவரது முக்கிய நோக்கமாகும். கேப்டன் பதவியில் இருந்து ஒரு மூத்த வீரர் விலகும்போது, அணியில் அவரது செல்வாக்கு முற்றிலும் மறைந்து விடுவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவே இந்த அதிரடி மாற்றம் செய்யப்படுகிறது.

இதன் முதற்கட்டமாக, போட்டிகளின் போதும் பயிற்சிகளின் போதும் கேப்டன்கள் தனித்து முடிவெடுக்காமல், அனுபவம் வாய்ந்த சக வீரர்களுடன் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்க ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய மத்திய ஒப்பந்த முறையையும் ஆதரித்துள்ள ஹெஸன், வீரர்கள் அனைத்து வடிவ போட்டிகளுக்கும் ஒரே மாதிரியாக மதிப்பிடப்படாமல், அவர்களின் குறிப்பிட்ட பங்களிப்பின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

2027-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரை இலக்காகக் கொண்டு கட்டமைக்கப்பட்டு வரும் பாகிஸ்தான் அணிக்கு, இந்த கூட்டுத் தலைமைத்துவ முறை பெரிய அளவில் கைக்கொடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.