உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த 15 ஆண்டுகளாகப் பொறுப்பு வகித்து வந்த டிம் குக், தனது பதவியிலிருந்து விலகத் தயாராகி வரும் செய்தி சர்வதேசத் தொழில்நுட்ப உலகையே உலுக்கியுள்ளது. ஸ்டீவ் ஜோப்ஸுக்குப் பிறகு ஆப்பிள் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்ற டிம் குக், தனது அசாத்திய தலைமைப் பண்பாலும் தொலைநோக்குப் பார்வையாலும் நிறுவனத்தைச் சிகரத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றார்.
மேலும் அவரது பதவிக் காலத்தில் ஆப்பிள் நிறுவனம் உலகிலேயே முதன்முறையாக பல டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை எட்டி சாதனை படைத்தது. தற்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆப்பிள் நிறுவனத்தில் ஒரு மாபெரும் தலைமை மாற்றம் நிகழப்போவது உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
டிம் குக் தனது சிஇஓ பதவியிலிருந்து விடைபெறும் வேளையில், ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த புதிய சிஇஓ-வாக ஜான் டர்னஸ் பொறுப்பேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் வன்பொருள் பொறியியல் பிரிவின் மூத்த துணைத் தலைவராகப் பணியாற்றி வரும் ஜான் டர்னஸ், நிறுவனத்தின் மிக முக்கியமான சாதனங்களை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றியவர் ஆவார்.
ஐபோன், ஐபேட் மற்றும் மேக் சாதனங்களின் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகச் சிறந்த அனுபவம் கொண்டவரான டர்னஸின் கைகளில் ஆப்பிள் நிறுவனத்தின் முழு அதிகாரமும் சென்று சேர இருப்பது, நிறுவனத்தின் புதிய சகாப்தத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் அவர் டிம் குக் உருவாக்கிய அசைக்க முடியாத வணிக சாம்ராஜ்யத்தை ஜான் டர்னஸ் எவ்வாறு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தொழில்நுட்ப உலகிலும் முதலீட்டாளர்கள் மத்தியிலும் எகிறியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு துறையிலும், புதிய தொழில்நுட்பச் சவால்களிலும் ஆப்பிள் நிறுவனம் தடம் பதித்து வரும் இந்த முக்கியமான காலகட்டத்தில் இந்த மாற்றம் நிகழ்கிறது. 15 ஆண்டுகால டிம் குக்கின் சாதனைகளுக்கு வழிவிட்டு, ஜான் டர்னஸ் கையில் புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்பட இருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பமாக மாறியுள்ளது.
