ஈழத் தமிழ் இனப்படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி சார்பில் வரும் மே 18-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஈழ மண்ணில் சிங்களப் பேரினவாதப் படையால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான இனப்படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவு நாள் வரும் மே 18-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி விளையாட்டுத் திடலில் அன்று மாலை 4 மணியளவில் மாபெரும் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

எனது  தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில், ஈழப்போரில் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கும், கொல்லப்பட்ட பொதுமக்களுக்கும் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்படும். அதனைத் தொடர்ந்து, தமிழினத்தின் உரிமை மற்றும் விடுதலைப் போராட்டத்தின் தியாகங்களைப் போற்றும் வகையில் இன எழுச்சி உரைகள் நிகழ்த்தப்பட உள்ளன.

மறைமலைநகரில் நடைபெறும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்கூட்டத்தில், உலகெங்கும் வாழும் தமிழின உணர்வாளர்களும், கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்று உயிரிழந்த நம் உறவுகளுக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டும் என அவ்வறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செங்கல்பட்டு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த பொதுக்கூட்டத்திற்கு திரள்நிதி வேண்டும் என்றும் சீமான் கேட்டுள்ளார்.