போக்குவரத்து நெரிசலும், சாலை விபத்துகளும் மலிந்துள்ள பெங்களூரு மாநகரில், விபத்தை ஏற்படுத்திய நபர் மீது கோபப்படாமல் அவருக்கு உதவிய கார் உரிமையாளரின் செயல் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறி நடைபாதையில் அதிவேகமாக வருகிறார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஒரு கார் மீது அவர் மோதி கீழே விழுகிறார். பொதுவாக இதுபோன்ற சூழல்களில் கார் உரிமையாளர்கள் கீழே இறங்கி வந்து சண்டையிடுவதும், வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் தான் வாடிக்கை.

ஆனால், இந்தச் சம்பவத்தில் கார் உரிமையாளர் எவ்வித ஆத்திரமும் அடையாமல் காரை விட்டு கீழே இறங்கி வந்து, விபத்துக்குள்ளான இருசக்கர வாகன ஓட்டியைத் தூக்கி விட்டு அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்தார். தவறு முழுக்க முழுக்க இருசக்கர வாகன ஓட்டி மீது இருந்தபோதிலும், கார் உரிமையாளர் காட்டிய இந்த முதிர்ச்சியான அணுகுமுறை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

‘கர்நாடகா போர்ட்ஃபோலியோ’ என்ற எக்ஸ் (X) பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது 2.20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. நடைபாதையில் வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமானது மற்றும் பாதசாரிகளுக்கு ஆபத்தானது என்று பதிவிட்டுள்ள பலரும், கார் உரிமையாளரின் அமைதியான குணத்தைப் பாராட்டியுள்ளனர்.

இதுகுறித்து நெட்டிசன் ஒருவர், “இந்தியச் சாலைகளில் நமக்குத் தேவையானது இத்தகைய பொறுமைதான்” என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “கார் உரிமையாளர் காட்டிய இந்த மனிதாபிமானம் சாலை ஆக்ரோஷக் (Road Rage) கொலைகளைக் குறைக்க உதவும்” என்று பாராட்டியுள்ளார். மேலும் நடைபாதையில் வாகனங்கள் செல்வதைக் கட்டுப்படுத்த போக்குவரத்து போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்துள்ளது.