லக்னோ ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலின் பெட்டியிலிருந்து 16 வயது இளம்பெண்ணின் உடல் பாகங்கள் துண்டு துண்டாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், அவரது பெற்ற தந்தையையே போலீஸார் கைது செய்துள்ளனர். மாற்று மத வாலிபரை காதலித்ததால் இந்த கொடூரக் ‘கௌரவக் கொலை’ அரங்கேறியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, லக்னோ ரயில் நிலையத்தில் கேட்பாரற்று ஒரு பெட்டியும் சில பைகளும் கிடந்தன. பயணிகள் கொடுத்த தகவலின்படி, போலீஸார் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தனர். அந்தப் பெட்டிக்குள் ஒரு இளம்பெண்ணின் உடல் (மார்புப் பகுதி) இருந்தது. அருகில் இருந்த பைகளில் கை, கால்கள் தனித்தனியாக வெட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. ஆனால், தலை மட்டும் அதில் இல்லை.
போலீஸாரின் தீவிர விசாரணையில், கொடூரமாகக் கொல்லப்பட்டவர் குஷிநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி என்பது தெரியவந்தது. அவரது தந்தை பிக்கன் அன்சாரிக்கு, தனது மகள் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் தொலைபேசியில் பேசி வருவது தெரிந்து ஆத்திரமடைந்துள்ளார். ஏற்கனவே இவரது மூத்த மகள் மாற்று மத வாலிபர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டதால், சமுதாயத்தில் தனக்குக் ‘கெட்ட பெயர்’ ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும், ஆத்திரமும் பிக்கன் அன்சாரிக்கு இருந்துள்ளது.
இது திடீரென நடந்த கொலை அல்ல, முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்வதற்கு 5 நாட்களுக்கு முன்பே, தனது மனைவி மற்றும் இரு மகன்களையும் பிக்கன் அன்சாரி உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த மே 16 அன்று, தனது சகோதரி மற்றும் மைத்துனரை வீட்டிற்கு வரவழைத்து, மூன்று பேருமாகச் சேர்ந்து அந்த 16 வயது சிறுமியைத் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர்.
பின்னர், உடலை மறைப்பதற்காக அதனை 6 துண்டுகளாக வெட்டியுள்ளனர். சிறுமியின் தலையை கிராமத்து குளத்தில் வீசிவிட்டு, மற்ற உடல் பாகங்களை பெட்டி மற்றும் பைகளில் பேக் செய்துள்ளனர். தொடர்ந்து, ஈ-ரிக்ஷா மூலம் ரயில் நிலையத்திற்கு எடுத்துச் சென்று, அங்கு நின்றிருந்த ரயிலின் ஸ்லீப்பர் கோச்சில் யாருக்கும் தெரியாமல் அந்தப் பெட்டியை வைத்துவிட்டுத் தப்பியுள்ளனர்.
ரயில் நிலையம் மற்றும் ரயிலில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் பெட்டியை எடுத்து வந்த நபர்களை போலீஸார் அடையாளம் கண்டனர். இதன் மூலம் குற்றவாளியான தந்தை பிக்கன் அன்சாரியை போலீஸார் கைது செய்தனர். மேலும், குளத்தில் வீசப்பட்ட சிறுமியின் தலையையும் போலீஸார் மீட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
