இந்தியா முழுவதும் ‘துணிவு’ திரைப்பட வசூல் 3 நாட்களில் 100 கோடி ரூபாய் கடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹெச். வினோத் இயக்கி, போனி கபூர் தயாரிப்பில் அஜித்தின் ‘துணிவு’ மற்றும் வம்சி இயக்கி, தில் ராஜு தயாரிப்பில் விஜயின் ‘வாரிசு’ ஆகிய 2 திரைப்படங்களும் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியானது. இந்த இரு படங்களும் ஒரேநேரத்தில் வெளியானதால் தொடக்கத்திலிருந்தே கடும் போட்டி என்பது இருந்து வந்தது. எனவே இந்த இரண்டு திரைப்படத்தின் வசூலிலும் மிகப்பெரிய பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இரண்டு திரைப்படங்களில் ஒன்றான துணிவு  திரைப்படமானது 100 கோடியை கடந்து பெருமை பெற்றுள்ளது. வசூல் விவரம் குறித்து தொடர்ந்து போட்டி நடைபெறும் நிலையில், விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து பொங்கல் வின்னர், ரியல் வின்னர் என்று ஹேஸ்டாக்குகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த சூழலில் தற்போது தமிழ்நாட்டை தாண்டி கேரளா, கர்நாடகா என இந்திய அளவில் 100 கோடி என்ற எல்லையை கடந்துள்ளது துணிவு படம். இதன் மூலம் 2023 ஆம் ஆண்டில் 100 கோடி வசூலை கடந்த முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது துணிவு. துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்கள் தமிழ்நாட்டில் 50 கோடி வசூலை கடந்தன.. முழுமையாக இதன் வசூல் விவரமானது இனிமேல் தான் தெரியவரும்.