வங்கதேசத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் மற்றும் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்களை முன்வைத்து, ஐ.பி.எல். தொடரில் அந்நாட்டு வீரர் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் எதிரொலியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் தற்போது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தகுந்த காரணமின்றி முஷ்தபிசுர் ரகுமான் நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள வங்கதேச கிரிக்கெட் வாரியம், இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது. மேலும், ஐ.பி.எல். போட்டிகளைத் தங்கள் நாட்டில் ஒளிபரப்பத் தடை விதித்துள்ளதோடு, உலகக் கோப்பையில் தாங்கள் விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) கோரிக்கை விடுத்தது.
வங்கதேசத்தின் இந்தக் கோரிக்கையை நிராகரித்த ஐ.சி.சி., போட்டி அட்டவணையில் எந்த மாற்றமும் செய்ய இயலாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தது. இருப்பினும், தாங்கள் இலங்கையில்தான் விளையாடுவோம் என வங்கதேசம் இரண்டாவது முறையாகப் பிடிவாதம் காட்டி வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு இன்று வரை ஐ.சி.சி. கெடு விதித்துள்ளது.
இந்தியா வந்து விளையாட வங்கதேசம் தொடர்ந்து மறுக்கும் பட்சத்தில், அந்த அணி உலகக் கோப்பை தொடரிலிருந்து நீக்கப்படும். அதற்குப் பதிலாக ஐ.சி.சி. தரவரிசையில் அடுத்த இடத்தில் உள்ள ஸ்காட்லாந்து அணி உலகக் கோப்பையில் சேர்க்கப்படும் என ஐ.சி.சி. அதிரடியாக எச்சரித்துள்ளது. இதனால் வங்கதேச கிரிக்கெட் வாரியம் எடுக்கப்போகும் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
