பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பாரமுலாவிலிருந்து (வடக்கு) பூஜ் வரை (தெற்கு) உள்ள 26 இடங்களில் ட்ரோன்கள் தொடர்ந்து  வருகின்றன என பாதுகாப்புத் துறைகள் தெரிவித்துள்ளன. இதில் பாரமுலா, ஸ்ரிநகர், அவந்திபோரா, நாக்ரோட்டா, ஜம்மு, ஃபிரோஸ்பூர், பதான்கோட், பாசில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சல்மேர், பர்மேர், பூஜ், குவார்பெட், லாகி நாலா ஆகிய இடங்கள் முக்கியமாகப் பெயரிடப்பட்டுள்ளன.

சந்தேகப்படும் சில ட்ரோன்கள் ஆயுதங்கள் ஏந்தியவையாக இருக்கக்கூடும் என்றும், இவை பொதுமக்கள் மற்றும் ராணுவத்தடங்களுக்கு நேரான அச்சுறுத்தல்களாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஃபிரோஸ்பூர் பகுதியில், ஒரு ஆயுதம் ஏந்திய ட்ரோன் குடியிருப்புப் பகுதியை தாக்கியது, இதனால் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தீவிரமாக காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது, மேலும் சம்பவ இடம் பாதுகாப்பு படைகளால் சூழப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு  தேவையான உதவிகள் செய்துவருகின்றனர்.

இந்திய ராணுவம் தற்போது தீவிர கண்காணிப்பு மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. எல்லை பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வீட்டில் தங்கியிருப்பதும், தேவையில்லாமல் வெளியே செல்லாதிருப்பதும், அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடைப்பிடிப்பதும் அவசியமாகும். தற்போது அவசர நிலை தேவையில்லை என்றாலும், அதிகபட்ச விழிப்பும் பாதுகாப்பும் அவசியம் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.