தமிழ்நாட்டில் கோவில்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகே விதிகளை மீறி செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபானக் கடைகள் அதிரடியாக மூடப்பட்டுள்ள நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ பட்டியலைத் தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பிலிருந்து வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று, இந்த கடைகளை மூடுவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.

மூடப்பட்ட அந்த 717 டாஸ்மாக் கடைகளின் எண்கள் மற்றும் அவை அமைந்திருந்த துல்லியமான விபரங்கள் அடங்கிய முழுமையான அறிக்கையைத் தமிழ்நாடு அரசு முறைப்படி வெளியிட்டுள்ளது. ​இந்த அறிவிப்பின்படி, மண்டல வாரியாக அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 290 டாஸ்மாக் கடைகளும், கோவை மண்டலத்தில் 179 கடைகளும் மூடப்பட்டுள்ளன.

மேலும், திருச்சி மண்டலத்தில் 84 கடைகளும், சென்னை மற்றும் சேலம் மண்டலங்களில் தலா 82 கடைகளும் என மொத்தம் 717 கடைகள் முழுமையாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில், கடைகளின் எண்களோடு அரசு வெளியிட்டுள்ள இந்த அதிரடிப் பட்டியல் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.