சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் மனதை உலுக்குவதாக உள்ளது. அதில், முறையான குடிநீர் வசதி இல்லாத ஒரு பகுதியில், பெண்கள் ஒரு சிறிய மண்ணால் சூழப்பட்ட பள்ளத்திலிருந்து தேங்கியிருக்கும் அசுத்தமான தண்ணீரைக் குடங்களில் மொண்டு செல்கின்றனர். குழாய் வசதியோ அல்லது சுத்தமான நீர் ஆதாரமோ அந்த இடத்தில் தென்படவில்லை. இந்த அவல நிலை, அங்கிருக்கும் மக்கள் அன்றாடத் தேவைக்காக இவ்வளவு மோசமான நீரைத்தான் பயன்படுத்துகிறார்களோ என்ற அச்சத்தையும் கவலையையும் எழுப்பியுள்ளது.

​இந்த வீடியோவை பகிர்ந்த நெட்டிசன்கள், மத்திய அரசின் ‘ஜல் ஜீவன் மிஷன்’ போன்ற திட்டங்கள் எந்த அளவிற்குச் செயல்பாட்டில் உள்ளது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்கக் கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கப்பட்டும், இன்னும் சில கிராமங்களில் மக்கள் இப்படி மண்ணில் ஊறும் நீருக்காகப் போராடுவது வேதனைக்குரியது எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அரசுத் திட்டங்கள் காகித அளவில் மட்டுமின்றி, கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது.