ஹாலோவீன் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, அமெரிக்கா முழுவதும் உள்ள மிருகக்காட்சிசாலைகள் “பயமுறுத்தும் பருவத்தை” விலங்குகளுக்கேற்ற வித்தியாசமான முறையில் கொண்டாடி வருகின்றன. ஜாகுவார் பூசணிக்காயுடன் விளையாடுவதிலிருந்து யானைகள் பூசணிக்காயை மிதித்து மகிழ்வது வரை, மிருகக்காட்சிசாலைகள் பண்டிகை உற்சாகத்தை விலங்குகளுடன் பகிர்ந்து கொள்கின்றன.
மில்வாக்கி கவுண்டி மிருகக்காட்சிசாலையில், ஜாகுவார் ஒன்று இறைச்சி நிரப்பப்பட்ட பூசணிக்காயை கிழித்து எறிவது கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. “இது விலங்குகளின் இயற்கையான வேட்டை உணர்வை தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஹாலோவீன் செறிவூட்டல் நடவடிக்கை” என மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் விளக்கினர். இதுபோன்ற நடவடிக்கைகள் பொழுதுபோக்கு மட்டுமல்லாது, விலங்கு நலனுக்கும் முக்கியமானவை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
View this post on Instagram
இதற்கிடையில், போர்ட்லேண்டில் உள்ள ஓரிகான் மிருகக்காட்சிசாலையில், யானைகள் தங்கள் பெரிய கால்களால் மாபெரும் பூசணிக்காயை மிதித்து நசைக்கும் பாரம்பரிய “பூசணிக்காய் விழா” நடைபெற்றது. இந்த காட்சியை கண்டு பார்வையாளர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். “இந்த செயல்கள் யானைகளுக்கு உடல் பயிற்சியாகவும், காடுகளில் அவை காட்டும் இயற்கை உணவு தேடும் நடத்தையைப் பிரதிபலிப்பதாகவும்” மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் கூறினர்.
அமெரிக்காவின் பல்வேறு மிருகக்காட்சிசாலைகளிலும் இதுபோன்ற பூசணிக்காய் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு விலங்குக்கும் அதன் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் இயற்கை நடத்தைப்படி பூசணிக்காயை கருப்பொருளாகக் கொண்ட ஹாலோவீன் செறிவூட்டல்கள் வழங்கப்படுகின்றன. “இவை வெறும் அழகான புகைப்படங்களுக்காக அல்ல; விலங்குகளின் மனநிலை மற்றும் உடல் நலத்தை மேம்படுத்தும் பராமரிப்பு நடவடிக்கைகளாகும்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேநேரம், மிச்சிகன் மாநிலத்தின் தலைநகரான லான்சிங்கில் ஹாலோவீன் பண்டிகைக்கு முன்னதாக நடந்த “ஹவ்லோவீன்” (Howl-o-ween) நிகழ்வில் நூற்றுக்கணக்கான உடையணிந்த நாய்கள் தெருக்களில் பங்கேற்று பார்வையாளர்களை மகிழ்வித்தன. எல்விஸ் பிரெஸ்லி முதல் ஸ்கூபி டூ வரை பல்வேறு வேடங்களில் வித்தியாசமான தோற்றமளித்த நாய்கள், தங்கள் உரிமையாளர்களுடன் சேர்ந்து ஓல்ட் டவுன் கலை மாவட்டத்தை அலங்கரித்தன. மேலும் இது நாய் ரசிகர்களுக்கான ஒரு சிறப்பான காட்சி என அனைவரும் பாராட்டினர்.
