பிளாட் உரிமையாளர்கள் மற்றும் வாடகைக்குக் குடியிருப்பவர்கள் அதிகம் வசதி செய்யும் பெரிய அப்பார்ட்மெண்ட்கள் மற்றும் ஹவுசிங் சொசைட்டிகளில், அண்மைக்காலமாக அமல்படுத்தப்பட்டு வரும் புதிய கட்டுப்பாடுகள் வீட்டு உரிமையாளர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் அமைந்துள்ளன.

பொதுவாக ஒரு ஹவுசிங் சொசைட்டியில் நாய் வளர்ப்பது, காரை தவறான இடத்தில் பார்க் செய்வது, நள்ளிரவில் உரத்த சத்தத்துடன் பார்ட்டி செய்வது அல்லது பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவது போன்ற விதியை மீறும் செயல்களில் வாடகைதாரர்கள் ஈடுபட்டால், அதற்கான அபராதத் தொகையை யாருக்கு விதிப்பது என்பதில் நீண்டகாலமாகக் குழப்பம் நிலவி வந்தது.

ஆனால் தற்போது பெரும்பாலான சொசைட்டி நிர்வாகங்கள், தவறு யார் செய்திருந்தாலும் அதற்கான முழு அபராதத்தையும் அந்த பிளாட்டின் உரிமையாளர்தான் செலுத்த வேண்டும் என்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்து வருகின்றன.

சொசைட்டி நிர்வாகத்தின் பார்வையில், அவர்கள் ஒப்பந்தம் செய்துகொண்டதும் சட்டப்பூர்வமாக உறுப்பினராக அங்கீகரித்ததும் பிளாட் உரிமையாளரை மட்டுமே தவிர, வாடகைக்குக் குடியிருப்பவரை அல்ல. இதனால் வாடகைதாரர்கள் சொசைட்டியின் விதிமுறைகளை மீறும்போது, அவர்களிடம் நேரடியாகச் சென்று அபராதம் வசூலிப்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன.

சில வாடகைதாரர்கள் அபராதத்தைக் கட்ட மறுத்துவிட்டு வீடைக் காலி செய்துவிட்டுச் சென்றுவிடுவதால், அந்த இழப்பைத் தவிர்க்கவே சொசைட்டி நிர்வாகங்கள் நேரடியாகப் பிளாட் உரிமையாளர்களின் தலையிலேயே இந்த அபராதப் பொறுப்பைச் சுமத்துகின்றன.

மாதம் முடிவதற்குக் காத்திருந்து வாடகையை வாங்குவது மட்டுமே தங்கள் வேலை என்று நினைத்திருந்த ஹவுஸ் ஓனர்களுக்கு, இந்த நடைமுறை மிகப்பெரிய தலையிடியாக உருவெடுத்துள்ளது. இந்த விதியினால் வாடகைதாரர் செய்யும் எந்தவொரு சின்னச் சின்னத் தவறுகளுக்கும் பிளாட் உரிமையாளர்களே தங்கள் சொந்தப் பாக்கெட்டிலிருந்து அபராதத் தொகையைக் கட்ட வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, இனிமேல் புதிய நபர்களுக்கு வீட்டை வாடகைக்கு விடும்போது வெறும் போலீஸ் வெரிஃபிகேஷன் மட்டும் போதாது என்றும், சொசைட்டி விதிகளை மீறி அபராதம் விதிக்கப்பட்டால் அதை வாடகைதாரரே ஏற்க வேண்டும் அல்லது அவர்களின் அட்வான்ஸ் தொகையிலிருந்து பிடித்துக் கொள்ளப்படும் என்ற கடுமையான நிபந்தனைகளை வாடகை ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும் என்றும் வழக்கறிஞர்களும் மூத்த பிளாட் உரிமையாளர்களும் எச்சரித்து வருகின்றனர்.