பொதுவாக மிருகக்காட்சிசாலை என்றாலே விலங்குகள் கூண்டில் அடைக்கப்பட்டிருக்க, மனிதர்கள் வெளியே நின்று வேடிக்கை பார்ப்பதுதான் வழக்கம். ஆனால், சீனாவில் உள்ள ஒரு விசித்திரமான மிருகக்காட்சிசாலையில் இது அப்படியே தலைகீழாக நடக்கிறது. இங்கு மனிதர்கள் கூண்டுக்குள் அடைக்கப்பட, சிங்கங்களும் புலிகளும் அவர்களைச் சுற்றிச் சுதந்திரமாக உலா வருகின்றன.
சீனாவின் சோங்கிங் (Chongqing) நகரில் அமைந்துள்ளது ‘லெஹே லெடு’ (Lehe Ledu) வனவிலங்கு பூங்கா. சாகச விரும்பிகளை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த இடத்தில், காட்டில் ஒரு கொடூரமான மிருகத்தால் துரத்தப்பட்டால் எப்படி இருக்கும் என்ற மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம் பார்வையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதன் காரணமாகவே, இங்கு செல்வதற்கான நுழைவுச் சீட்டுகள் (Tickets) மூன்று மாதங்களுக்கு முன்பே விற்றுத் தீர்ந்துவிடுவது ஆச்சரியமான விஷயம்.
இந்த இடத்தைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள், ஒரு லாரியின் பின்புறம் பொருத்தப்பட்ட மிக உறுதியான இரும்புக்கூண்டிற்குள் அடைக்கப்படுகின்றனர். பின்னர் அந்த லாரி விலங்குகள் நடமாடும் பகுதிக்குள் கொண்டு செல்லப்படுகிறது.
மனிதர்களைக் கண்டவுடன் பசியுடன் இருக்கும் சிங்கங்களும் புலிகளும் அவர்களை வேட்டையாடும் நோக்கில் லாரியை நோக்கிப் பாய்கின்றன. விலங்குகளை இன்னும் நெருக்கமாகக் கொண்டு வர, கூண்டின் வெளிப்புறத்தில் பெரிய இறைச்சித் துண்டுகள் கட்டித் தொங்கவிடப்படுகின்றன. பசியில் இருக்கும் விலங்குகள் அந்த இறைச்சியைப் பறிக்கக் கூண்டின் மீது ஏறித் தாக்கும்போது, உள்ளே இருக்கும் மனிதர்களுக்குத் திகிலூட்டும் அனுபவம் கிடைக்கிறது.
சாகசம் ஒருபுறம் இருந்தாலும், ஆபத்துகளும் இதில் அதிகம். எனவே, பார்வையாளர்களுக்குப் பூங்கா நிர்வாகம் கடுமையான எச்சரிக்கைகளை வழங்குகிறது:
சுற்றுலாப் பயணிகள் எக்காரணம் கொண்டும் தங்கள் கைகளையோ அல்லது விரல்களையோ கூண்டுக்கு வெளியே நீட்டக்கூடாது.
விலங்குகள் கூண்டின் மீது பாயும்போது அமைதியைக் கடைபிடிக்க வேண்டும்.
கூண்டுக்குள் பாதுகாப்பாக இருந்தாலும், ஒரு சிங்கத்தின் கர்ஜனையையும் அதன் பற்களையும் சில சென்டிமீட்டர் தொலைவில் நேருக்கு நேர் பார்ப்பது, வாழ்நாளில் மறக்க முடியாத பயங்கரமான அனுபவமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
