சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் பலவிதமான சாகச வீடியோக்கள் வைரலாவது வழக்கம்தான். ஆனால், நெஞ்சைப் பதற வைக்கும் வகையில் ரஷ்ய இளைஞர் ஒருவர் சுழலும் ஹெலிகாப்டரின் விசிறி மீது நின்று செய்துள்ள உயிருக்கு ஆபத்தான சாகசக் காணொளி தற்போது இணைய உலகையே அதிர வைத்து வருகிறது.
ரஷ்யாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரைச் சேர்ந்த யெவ்ஜெனி செபோடரேவ் என்ற பிரபல சாகச வீரரே இந்த அபாயகரமான காரியத்தை செய்துள்ளார். ஏற்கனவே பல ஆபத்தான சாகசங்களைச் செய்து சமூக வலைத்தளங்களில் பிரபலமான இவர், இந்த முறை ஹெலிகாப்டர் விசிறியைப் பயன்படுத்தி ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளார்.
வைரலாகும் அந்த வீடியோவில், யெவ்ஜெனி ஒரு உயரமான கிரேனில் தொங்கியபடி கீழே வேகமாகச் சுழன்று கொண்டிருக்கும் ஹெலிகாப்டர் விசிறிக்கு அருகே மெதுவாக இறங்குகிறார். ஒரு சிறிய தவறு நடந்தாலும் உடல் துண்டாகி உயிருக்கே ஆபத்தாய் முடியும் என்பதை உணர்ந்தும், அவர் தனது கால்களை சுழலும் விசிறியின் சுழற்சி இடைவெளிகளுக்கு இடையே மிகக் கவனமாக வைக்கிறார்.
சுழலும் விசிறியின் இடைவெளியில் தன் பாதத்தை லாவகமாகத் தொட்டு விட்டு, அடுத்த நொடியே ஒரு கணம் கூட தாமதிக்காமல் மீண்டும் மேலே காற்றில் தொங்கி தப்பிக்கிறார். இந்த அசாத்திய திறமையும் கவனமும் கலந்த ஆபத்தான சாகசக் காட்சி, பார்ப்பவர்களின் மூச்சடைக்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலர் இவரது அசாத்திய தைரியத்தைப் பாராட்டி வந்தாலும், வெறும் லைக்குகளுக்காகவும் புகழுக்காகவும் இப்படி சொந்த உயிரைப் பணயம் வைப்பது சுத்த பைத்தியக்காரத்தனம் என்றும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
