மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பொது சுகாதார பொறியியல் (PHE) அலுவலகம் அருகே கடந்த ஜனவரி 9-ம் தேதி மர்மமான பை ஒன்று கிடந்தது.
அந்தப் பையில் காய்கறிகளும், முந்திரி தூவப்பட்ட ‘பேடா’ (Peda) இனிப்பு பெட்டியும் இருந்தன. நீண்ட நேரமாகியும் யாரும் அந்தப் பையை எடுக்க வராததால், அங்கிருந்த பாதுகாவலர் தஸாரு யதுவன்ஷி (Dasaru Yaduvanshi) அதனை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
அந்த இனிப்புகளைத் தானும் சாப்பிட்டு, அருகில் டீக்கடை வைத்திருக்கும் சுந்தர் லால் கத்தூரியா (Sundar Lal Kathuria – 72) மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கொடுத்துள்ளார்.
இனிப்பைச் சாப்பிட்ட சில மணிநேரங்களிலேயே அனைவருக்கும் வாந்தி, மயக்கம் மற்றும் ரத்த அழுத்தம் குறைந்து உடல்நிலை மோசமானது.
இதில் பாதுகாவலர் தஸாரு ஜனவரி 11-ம் தேதியும், முதியவர் சுந்தர் லால் ஜனவரி 13-ம் தேதியும் உயிரிழந்தனர். இந்நிலையில், அவரது பேத்தி குஷ்பூ கத்தூரியா (Khushboo Kathuria – 22) இன்று (ஜனவரி 14) காலை நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
