அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ‘சீனாவின் நாஸ்ட்ராடாமஸ்’ என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ஜியாங் ஷுச்சின் ஒரு அதிரடி எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரான் மீதான போர் நடவடிக்கை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு ஒரு ‘மிகப்பெரிய பொறியாக’ அமையக்கூடும் என்று அவர் கூறியுள்ளார். ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்பதையும், ஈரான் உடனான பதற்றம் அதிகரிக்கும் என்பதையும் ஜியாங் ஏற்கனவே கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது ஆய்வின்படி, அமெரிக்கா நேரடியாக ஈரானுடன் போரில் இறங்கினாலோ அல்லது தனது தரைப்படையை ஈரானுக்குள் அனுப்பினாலோ, அது ஒரு நீண்ட காலப் போராட்டமாக மாறும். ஈரானின் புவியியல் அமைப்பு மற்றும் அங்குள்ள உள்ளூர் அமைப்புகளின் பலம் காரணமாக, அமெரிக்காவின் வழக்கமான ராணுவ வியூகங்கள் அங்கு எடுபடாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மோதல் அமெரிக்காவிற்கு பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும், ஒரு தவறான முடிவு ஒட்டுமொத்த உலக அரசியலையும் தலைகீழாக மாற்றிவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தற்போது நிலவி வரும் இந்தச் சூழல் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
