ரஷியாவுடன் எரிசக்தி உறவுகளை துண்டிக்க இந்தியா மற்றும் சீனாவுக்கு அமெரிக்கா அழுத்தம் ஏற்படுத்துவதைக் கடுமையாக விமர்சித்துள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் மோடி இந்திய மக்கள் நலனுக்கு எதிரான முடிவுகளை ஒருபோதும் எடுப்பதில்லை என்றும், ரஷிய எரிசக்தி தொடர்பான உறவுகளை இந்தியா தொடரும் என உறுதியளித்துள்ளார்.
ரஷியாவின் சோச்சி நகரில் நேற்று நடைபெற்ற ‘வால்டாய் மன்றம் (Valdai Forum)’ நிகழ்வில் உரையாற்றிய அவர், “இந்தியா நமது எரிசக்தி விநியோகங்களை மறுத்தால், அது ஒரு கணிசமான இழப்பாகும். ஆனால், இந்திய மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் பிரதமர் மோடி, ஒருபோதும் இத்தகைய தலைகுனியும், நேர்மையற்ற முடிவுகளை எடுப்பவர் அல்ல. அவர் என்ன செய்கிறாரோ, அதை நன்கு புரிந்துகொள்ளக் கூடியவராகவும், நம்பகமானவராகவும் உள்ளார்” என கூறினார்.
அமெரிக்கா தனது நோக்கங்களை பிற நாடுகளின் மீது வலியுறுத்தும் செயல்பாடுகளையும் புதின் சுட்டிக்காட்டினார். “அமெரிக்கா, ரஷியாவிலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தானாக வாங்கிக்கொண்டு இருக்கிறது. அதே நேரத்தில், மற்ற நாடுகள் எங்கள் எரிசக்தி பொருட்களை வாங்காதிருக்கவேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறது. இது இரு நிலையான தரப்பாட்டு போக்காகும்” என்று தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்குள், ரஷியாவிலிருந்து அமெரிக்காவுக்கு சுமார் $1.2 பில்லியன் மதிப்பிலான யுரேனியம் விநியோகிக்கப்படும் என்றும், 2026 ஆம் ஆண்டில் இது $800 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம் எனவும் கூறினார்.
“அமெரிக்கர்கள் எங்கள் யுரேனியத்தை வாங்குகிறார்கள் – ஏனெனில் அது லாபகரமானது. அவர்கள் சரியான செயல் செய்கிறார்கள். நாங்களும் இந்த விநியோகங்களை நம்பகத்தன்மையுடனும், சீராகவும் தொடர தயாராக இருக்கிறோம்,” என்றார் புதின்.
மேலும் இந்தியா, ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் சூழலில், அமெரிக்கா, அதற்காக 50 சதவீத வரி விதித்து அழுத்தம் கொடுத்துள்ள நிலையில், புதின் வெளியிட்டுள்ள இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
