திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நாம் ஆட்சியை இழக்கவில்லை என்றும், நம்முடைய கூட்டணியின் தயவில் தான் தற்போது ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார். தேர்தல் வெற்றி, தோல்விகளைத் தன்னை போன்ற சீனியர்கள் பலமுறை பார்த்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தனிப்பட்ட ஒருவரின் தோல்வியை விட கட்சியின் தோல்வியே பெரியது என்றார்.
திமுக தொடர்ந்து இரண்டு முறை வென்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காகக் கடுமையாக உழைத்தும் அது நிறைவேறாமல் போனது வருத்தமளிப்பதாகத் தெரிவித்த அவர், தேர்தல் தோல்வியைக் கண்டு இளைஞர்கள் தொண்டர்கள் யாரும் சோர்ந்து போக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், குழந்தைகள் ஒரு புதிய பொம்மையைப் பார்த்தால் ஆசைப்பட்டு வாங்கிவிட்டு, இரண்டு நாட்களில் சலித்துப்போய் தூக்கிப் போடுவதைப் போலத்தான் தற்போதைய அரசியல் நிலையும் உள்ளது என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தங்களுக்குப் பிடித்த நடிகர் கட்சி ஆரம்பித்ததால் மக்கள் ஆர்வத்தில் வாக்களித்துள்ளதாகவும், ஆனால் கொஞ்ச நாளிலேயே உண்மை நிலையை உணர்ந்து மக்கள் மீண்டும் திமுகவையே ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இப்போது நடந்திருப்பது அரசியல் சுனாமி அல்ல, வெறும் சினிமா சுனாமி தான் என்றும், பெரும்பான்மை கிடைக்காமல் நம் தோழமைக் கட்சிகளின் துணையோடு நடக்கும் இந்த ஆட்சி நிச்சயமாக ஐந்து ஆண்டுகள் நீடிக்காது என்றும் அவர் தனது பேச்சில் சுட்டிக்காட்டியுள்ளார்.
