தென்காசியில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசைப் பற்றி இப்போதே எந்தக் கணிப்பையும் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார். புதிய அரசு அமைந்து சில நாட்களே ஆவதால், இன்னும் ஆறு மாதங்கள் கடந்த பிறகே அதன் செயல்பாடுகள் குறித்துக் கருத்து சொல்ல முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மதிமுக தொடர்ந்து திமுக கூட்டணியிலேயே நீடிக்கிறது என்றும் அவர் தனது பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து ஆவேசமாகப் பேசிய வைகோ, இத்தகைய கொடூரக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு நீதிமன்றங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஜாமீன் வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆயுள் தண்டனை என்று கூறிவிட்டு குற்றவாளிகளைப் பத்து ஆண்டுகளில் விடுதலை செய்யக் கூடாது என்றும், வாழ்நாள் முழுவதும் அவர்கள் சிறையிலேயே இருக்கும் வகையில் தமிழக அரசு புதிய சட்டம் இயற்றி அதற்கு மத்திய அரசின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
