தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என்று தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் இன்று  அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

அதாவது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது  12 ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த மார்ச் 10, 2026 அன்று பள்ளிக்குச் சென்ற நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையிலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அந்த 12-ஆம் வகுப்பு மாணவி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் படுகொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், குற்றவாளியை விரைந்து பிடிக்க 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (வயது 35) என்பவர் இந்தக் கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்து, அவர் கைது செய்யப்பட்டார்.

போலீசாரின் விசாரணையில் தர்ம முனீஸ்வரன் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாயின. இவர் ஏற்கனவே கடந்த 2020-ஆம் ஆண்டு எட்டயபுரம் அருகே மூதாட்டி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்றவர் ஆவார். ஆனால், அந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்திருந்த தர்ம முனீஸ்வரன்,  மீண்டும் ஒரு பள்ளி மாணவியைக் குறிவைத்து இக்கொடூரத்தைச் செய்துள்ளது தெரியவந்தது.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கின் முக்கியத் தீர்ப்பை நீதிமன்றம் இன்று வழங்கியது. 12-ஆம் வகுப்பு மாணவியைக் கொடூரமாகக் கொன்ற வழக்கில் தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.