கென்யாவில் உள்ள பிரபலமான வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு வீடியோ, உலகம் முழுவதும் உள்ள நெட்டிசன்களின் இதயங்களை நெகிழ வைத்துள்ளது. இதில், தாயை இழந்த ஒரு வரிக்குதிரை குட்டியும், அதனை தாய்போல பராமரிக்கும் பணியாளரும் இடையே ஏற்பட்ட அன்பும் நெருக்கமும் பதிவாகியுள்ளது. ‘பாம்பி’ எனப் பெயரிடப்பட்ட இந்த வரிக்குதிரை குட்டியின் தாய், ஆண்டின் தொடக்கத்தில் காட்டுச்சிங்கங்களால் கொல்லப்பட்டது. கடுமையாக காயமடைந்த பாம்பி, தொடர்ந்து மருத்துவ கவனிப்பும், பாதுகாப்பும் தேவைப்படும் நிலையில் ஷெல்ட்ரிக் அறக்கட்டளைக்குள் கொண்டு வரப்பட்டது.
அங்கே பாம்பிக்கு தாயின் அன்பையும் பாதுகாப்பையும் வழங்கும் பணி பராமரிப்பாளர் பீட்டருக்கு ஒப்படைக்கப்பட்டது. பாம்பியின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட பீட்டர், அவளுக்குத் தாயைப் போன்ற பாசத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்த ஒரு தனித்துவமான வழியை தேர்ந்தெடுத்தார். பாம்பி தாயை அடையாளம் காணும் வகையில், வரிக்குதிரையின் கோடிட்ட தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, பீட்டர் வரிக்குதிரை வடிவிலான சிறப்பு ஆடை (கோட்) ஒன்றை அணிந்து பாம்பியுடன் உறவுப் பேணத் தொடங்கினார். இது, பாம்பிக்கு பீட்டரை தன் தாயாகவே உணரச் செய்தது.
View this post on Instagram
அங்குள்ளவர்கள் “வரிக்குதிரைகள் தங்கள் தாயின் கோடுகளை அடையாளமாகக் கொண்டு நெருக்கம் காணும் தன்மை கொண்டவை. இதனால் பீட்டருடன் பழகுவதில் பாம்பிக்கு எந்த தயக்கமும் ஏற்படவில்லை.” என தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்ட நிலையில் தற்போது வரை 3 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்வையிடப்பட்டுள்ளது. மேலும் பாசம், பரிவு, உயிர்களின் உணர்வுப் பிணைப்பு ஆகியவற்றை ஆழமாக உணர்த்தும் இந்தக் காணொளி, பார்த்த நெட்டிசன்களின் மனங்களில் தனிச்சிறப்பை ஏற்படுத்தியுள்ளது.
