2025-26 ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்கிற செயல்முறை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுவரை 6 கோடிக்கும் மேற்பட்ட ஐடிஆர் (ITR) தாக்கல்கள் செய்யப்பட்டுள்ளன என்று வருமான வரித் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், “வரி செலுத்துவோரும் கணக்கீட்டு நிபுணர்களும் தரும் ஒத்துழைப்புக்கு நன்றி. கணக்குத் தாக்கல் தொடந்து நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளது.
2024-25ஆம் நிதியாண்டில் ஈட்டிய வருமானத்திற்கேற்ப 2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்யும் கடைசி தேதி முதலில் ஜூலை 31 ஆக இருந்தது. ஆனால் ஐடிஆர் படிவங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை காரணமாகக் கொண்டு, கால அபராதம் இன்றி தாக்கல் செய்யும் அவகாசத்தை வருமான வரித்துறை செப்டம்பர் 15 வரை நீட்டித்தது.
இதையொட்டி இன்று (செப்டம்பர் 15) கடைசி நாளாக இருப்பதால், இன்னும் தாக்கல் செய்யாதவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய தாக்கல்களை தாமதமாகச் செய்தால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், 24 மணி நேர உதவி மையம் தொலைபேசி மற்றும் இணையதளம் வாயிலாக செயல்பட்டு வரிவகுப்பாளர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு அளித்து வருகிறது.
