சமாஜ்வாதி கட்சி எம்.பி.யும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் லக்னோவிலிருந்து டெல்லி செல்ல இருந்த இண்டிகோ விமானம், நேற்று  காலை ஓடுபாதையில் பயணம் தொடங்கியபோது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணத்தை ரத்து செய்யும் பரபரப்பு நிகழ்ந்தது.

விமான ஊழியர்கள் கோளாறை நேரத்தில் கவனித்ததால், விமானிகள் உடனடியாக முன்னெச்சரிக்கையாக விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்தி மீண்டும் விமான நிலையத்துக்குள் கொண்டு வந்தனர்.

விமானம் வேகமாக ஓடுபாதையில் சென்றபோது திடீரென நின்றதால் பயணிகள் சில நிமிடங்கள் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தனர். பின்னர் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி, கொச்சியிலிருந்து அபுதாபிக்க புறப்பட்ட இண்டிகோ விமானம், தொழில்நுட்ப கோளாறால் திரும்பி வந்திருந்தது. இதனால் ஒரே வாரத்தில் இண்டிகோ விமானங்களில் இது இரண்டாவது சம்பவமாக பதிவாகி, பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.