கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்தில் பலர் உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்தை வெளியிட்டார்.

அவர் பேசியதாவது: “கரூர் சம்பவம் மிகவும் கொடுமையானது. இனி தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் எப்போதும் நடைபெறக் கூடாது. இந்தச் சம்பவத்தை அரசியலாகப் பார்க்க விரும்பவில்லை. யார் மீது குற்றம் சுமத்துவது என்பது குறித்து பேசாமல், எதிர்காலத்தில் இப்படிப்பட்ட துயர சம்பவங்கள் நடைபெறாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மேலும், “தவெக தரப்பினர் கூட்டத்துக்காக கேட்ட இடம் குறுகியதாக இருந்தது. மக்களின் திரளான வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் இட வசதி குறைபாடுகள் காரணமாகவே இத்தகைய துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதனால் இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் அரசும், கட்சிகளும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று செந்தில் பாலாஜி வலியுறுத்தினார்.