டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியின் பின்னணியில் கேரளாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைந்தது. இறுதிப்போட்டியில் 89 ரன்கள் விளாசி அசத்திய அவர், இத்தொடரில் மொத்தம் 321 ரன்கள் குவித்து ‘தொடர் நாயகன்’ விருதையும் வென்று சாதனை படைத்தார்.
மேலும் ஆரம்பத்தில் வாய்ப்பு கிடைக்காத போதிலும், கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு அவர் முதுகெலும்பாகத் திகழ்ந்தார். சஞ்சு சாம்சனின் இந்த அபாரமான ஆட்டத்தைப் பாராட்டிய கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், “இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், இந்திய அணியின் இந்த வரலாற்று வெற்றி தேசத்திற்கே பெருமை சேர்க்கும் தருணம் என்றும், சஞ்சு சாம்சன் கேரளாவுக்கும் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் புகழைத் தேடித்தந்துள்ளார் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். சர்ச்சைக்குரிய திரைப்படமான ‘தி கேரளா ஸ்டோரி’யை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி, ஒரு சாதனையாளரின் வெற்றியே மாநிலத்தின் உண்மையான அடையாளம் என்பதை அவர் தனது பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
