2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கட்சி மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த முடிவை அறிவித்த பிறகு, பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்த தினகரன் தனது ஆதரவை உறுதிப்படுத்தினார். இந்தச் சந்திப்பின்போது அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உடனிருந்தனர். ஆனால், இந்தக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் எடப்பாடி பழனிசாமி அந்த இடத்தில் இல்லாதது பலரது புருவங்களை உயர்த்தியது.

​இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வீர்களா?” என்ற காரசாரமான கேள்வி தினகரனிடம் முன்வைக்கப்பட்டது. இதற்குத் தினகரன் பதில் சொல்லத் தொடங்கிய உடனேயே, அருகே இருந்த பியூஷ் கோயல் குறுக்கிட்டு நயினார் நாகேந்திரனிடம் “பதில் சொல்ல வேண்டாம், கிளம்பலாம்” என ரகசியமாகச் சிக்னல் கொடுத்தார். இதனால் தினகரன் தனது பேச்சை பாதியிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் பாஜக தலைவர்கள் பாதியிலேயே கிளம்பியது, அரசியலில் ஒரு புதிய சர்ச்சையையும் குழப்பத்தையும் கிளப்பியுள்ளது.