தமிழக வெற்றி கழகம் இதுவரை எந்தத் தேர்தலிலும் போட்டியிடாததால், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி அது ஒரு பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சியாகவே உள்ளது. இதனால் அக்கட்சிக்கு நிரந்தரச் சின்னம் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. இந்நிலையில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 234 தொகுதிகளிலும் தங்களது வேட்பாளர்கள் ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிட வசதியாக “பொதுச் சின்னம்” ஒதுக்குமாறு தவெக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

​கட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விருப்பப் பட்டியலில் விசில், ஆட்டோ, கப்பல், கிரிக்கெட் மட்டை, மடிக்கணினி என மொத்தம் 10 சின்னங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் ‘விசில்’ சின்னம் கிடைத்தால் அது விஜய் ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் இதில் எந்தச் சின்னத்தை இறுதி செய்யும் என்பதே இப்போது ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையாக உள்ளது.