நாகரீக உலகை நோக்கி நாம் எவ்வளவுதான் வேகமாக முன்னேறிச் சென்றாலும், வரதட்சணை என்ற கொடூரமான அரக்கன் இன்னும் இந்தியப் பெண்களை உயிரோடு காவு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறான் என்பதைத் தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் வரதட்சணை கொடுமை காரணமாக மொத்தம் 5,737 பெண்கள் மிகக் கொடூரமான முறையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சித் தகவல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சட்டங்கள் பல கடுமையாக்கப்பட்டாலும், விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும் கூட, இன்னும் பல வீடுகளில் பெண்கள் வரதட்சணை என்ற பெயரில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதும், தற்கொலைக்கு தள்ளப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாகவே நீடிக்கிறது என்பதை இந்த அறிக்கை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

வரதட்சணைக்கு எதிரான சட்டங்கள் இன்னும் தீவிரமாகப் பாய வேண்டும் என்றும், சமூகத்தில் மனிதநேயம் மாற வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.