ஐபிஎல் 2026 சீசன் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் ‘யார்க்கர் கிங்’ ஜஸ்பிரித் பும்ரா தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த வீடியோவில், மைதானத்தின் புல்வெளியில் ‘Indians’ என்று எழுதப்பட்டிருக்கும் பகுதிக்கு மேலே பும்ரா நடந்து செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதைப் பார்த்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர் ஒருவர், “நமது நாட்டின் பெயரான ‘Indians’ என்று மைதானத்தில் எழுதுவது முறையல்ல, வீரர்கள் அதன் மீது நடப்பது வருத்தமளிக்கிறது. எனவே இனி மைதானத்தில் ‘MI’ என்று மட்டும் எழுதுங்கள்” என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திற்கு டேக் செய்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் இணையத்தில் இருவேறான கருத்துக்களை உருவாக்கியுள்ளது. ஒரு தரப்பினர் “தேசப்பற்று முக்கியம், இது போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்” என ஆதரிக்க, மற்றொரு தரப்பினரோ “இது ஒரு சாதாரண விஷயம், இதற்கெல்லாம் இவ்வளவு டென்ஷன் ஆகக் கூடாது” எனப் பதிவிட்டு வருகின்றனர்.

இதுவரை இந்த விவகாரம் குறித்து மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை என்றாலும், ரசிகர்களின் இந்த நுணுக்கமான கவனிப்பு இப்போது வைரலாகி வருகிறது.