சில்லு கருப்பட்டி, ஏலே மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு பகுதியான புத்தம் புது காலை விடியாதா என்ற “லோனர்ஸ்” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். இவரது “மின்மினி” படத்தின் சூட்டிங் கடந்த 2015ம் வருடம் துவங்கப்பட்டது. இது குழந்தைகளாக இருந்து இளம்பருவத்தினராக மாறும் கதாபாத்திரங்களை கொண்ட கதைக்களம் ஆகும். இதனால் கடந்த 2014-ம் வருடம் குழந்தைப் பருவத்தில் இருந்த கதாபாத்திரங்களை படமாக்கிவிட்டார்.

அதன்பின் அந்த கதாபாத்திரங்கள் இளம் பருவத்தை அடையும்வரை அதாவது 7 வருடங்கள் காத்திருந்து அவர்களின் முதிர்ச்சியடைந்த தோற்றத்தை தத்ரூபமாக திரையில் கொண்டு வரும் அடிப்படையில் கடந்த ஆண்டு “மின்மினி” படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டது. இந்த படத்தின் வாயிலாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

ஷங்கர் இயக்கத்தில் 2010-ம் வருடம் வெளியாகிய எந்திரன் படத்தில் இடம்பெற்ற “புதிய மனிதா” எனும் பாடலில் ஒரு சிறிய பகுதியை கதீஜா பாடியிருந்தார். அண்மையில் வெளியாகிய பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்ற சின்னஞ்சிறு நிலவே பாடலையும் கதீஜா பாடி உள்ளார். இந்நிலையில் மின்மினி படத்துக்கு கதீஜா ரகுமான் இசையமைக்கிறார் என்பதை ஹலிதா ஷமீம் தன் டுவிட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளார்.