சமூக வலைதளங்களில் குழந்தைகளின் சுட்டித்தனமான வீடியோக்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில், தடுப்பூசி போட வந்த இடத்தில் மருத்துவருக்கே ‘தடுப்பூசி’ போட முயன்ற சிறுவனின் வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், தந்தை ஒருவர் தனது குழந்தையைத் தடுப்பூசி போடுவதற்காக மருத்துவமனைக்கு அழைத்து வருகிறார். அங்குள்ள மருத்துவர் குழந்தைக்கு ஊசி போட்டுவிட்டு, அந்தச் சிரிஞ்சை மேசையின் மீது வைக்கிறார். பின்னர் மருத்துவக் கட்டணத்தைப் பெறுவதற்காக அவர் திரும்பிய அந்த நொடியில், யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
தடுப்பூசி போட்ட வலியால் ஆத்திரமடைந்த அந்தச் சிறுவன், மேசையிலிருந்த ஊசியை மின்னல் வேகத்தில் எடுத்து, மருத்துவருக்குத் தெரியாமலேயே அவரது இடுப்புப் பகுதியில் குத்தினான். “எனக்குக் கொடுத்த வலியை நீயும் அனுபவி” என்பது போல அந்தச் சிறுவன் காட்டிய முகபாவனை பார்ப்பவர்களைச் சிரிக்க வைத்துள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, லட்சக்கணக்கான விருப்பங்களைப் (Likes) பெற்று வைரலாகி வருகிறது. இதைக் கண்ட நெட்டிசன்கள் தங்களது நகைச்சுவையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
“சிறுவயதில் நம் அனைவருக்கும் இருந்த ஆசையை இந்தச் சிறுவன் நிறைவேற்றிவிட்டான்” என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், “ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்கிற நியூட்டனின் மூன்றாவது விதி இதுதான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வீடியோ ஒருபுறம் சிரிப்பலைகளை ஏற்படுத்தினாலும், சமூக வலைதள ‘துப்பறியும்’ நபர்கள் இதில் உள்ள ஒரு முக்கியக் குறைபாட்டைச் சுட்டிக்காட்டியுள்ளனர். பொதுவாகத் தடுப்பூசி போடும்போது துணிகளை விலக்கிவிட்டுத் தான் ஊசி போடுவார்கள். ஆனால், இந்த வீடியோவில் மருத்துவர் சிறுவனின் சட்டையின் மேலேயே ஊசி போடுவது போல உள்ளது. எனவே, இது ஒரு பொழுதுபோக்குக்காகத் திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
