ஆஸ்திரேலிய ராணுவம் தோற்றுவிக்கப்பட்ட 125 ஆண்டுகளில் முதன்முறையாக, அதன் தலைமைத் தளபதியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் (Susan Coyle) இந்த உயரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் வெளியிட்ட அறிவிப்பில், “இது ஆஸ்திரேலிய ராணுவ வரலாற்றில் ஆழமான வரலாற்றுத் தருணம். ஒரு ராணுவப் பிரிவுக்குத் தலைமை தாங்கும் முதல் பெண் என்ற பெருமையை சூசன் கோய்ல் பெறுகிறார். பாதுகாப்புப் படையில் பாலினப் பிரதிநிதித்துவத்திற்கு இது ஒரு முக்கிய மைல்கல்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தில் பணியாற்றி வரும் சூசன் கோய்ல், வரும் ஜூலை 2026-இல் ராணுவத் தளபதியாக (Chief of Army) பொறுப்பேற்க உள்ளார். அவரது பின்னணி குறித்த சில தகவல்களை பாப்போம். கடந்த 1987-இல் ராணுவ ரிசர்வ் படையில் சேர்ந்த அவர், ராயல் மிலிட்டரி கல்லூரியில் பட்டம் பெற்றவர். அமெரிக்க ராணுவப் போர்க் கல்லூரியின் சிறப்புப் பட்டதாரி மற்றும் ஹார்வர்ட் மேலாண்மைத் திட்டத்தின் முன்னாள் மாணவர் ஆவார்.
🚨 BREAKING
Australia appoints its first-ever female Army Chief ⚠️🇦🇺
Lt. Gen. Susan Coyle set to take command in July, marking a historic milestone#Breaking #Australia #Military #WomenInLeadership #History #Viral pic.twitter.com/oHePiMul6e
— DR ADNAN ALI (@DrMalko) April 13, 2026
ஆப்கானிஸ்தான், சாலமன் தீவுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடந்த சர்வதேச ராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர். தகவல் போர்முறைத் தலைவர் (Head of Information Warfare), கூட்டுப் படைக் கட்டளைத் தளபதி போன்ற பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். விண்வெளி மற்றும் சைபர் பாதுகாப்புத் துறைகளிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆஸ்திரேலிய ராணுவம் ட்ரோன்கள் (Drones), சைபர் தொழில்நுட்பம் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் என நவீனப் போர்முறையை நோக்கித் தன்னை மாற்றிக் கொண்டு வருகிறது. இந்தச் சூழலில், தனது பன்முக அனுபவம் நவீன கால ராணுவத்தை வழிநடத்த வலுவான அடித்தளமாக இருக்கும் என்று சூசன் கோய்ல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அவரது சிறந்த சேவையைப் பாராட்டி ஆஸ்திரேலிய அரசு அவருக்கு ‘ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா’ (Order of Australia) உள்ளிட்ட உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.
