விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இளம்பெண் தன்னுடைய அக்கா வீட்டில் தங்கி இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த மலைக்கனி என்ற வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வாலிபர் கொத்தனாராக இருக்கிறார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் ஒருநாள் தன்னுடைய அக்கா வீட்டுக்கு வாலிபரை வருமாறு இளம்பெண் அழைத்துள்ளார்.

அப்போது அங்கு யாரும் இல்லாததால் உடனடியாக அந்த வாலிபர் கடைக்கு சென்று குளிர்பானம் வாங்கி வந்து அதில் மயக்க மருந்து கலந்து இளம்பெண்ணுக்கு கொடுத்துள்ளார். அதைக் குடித்த சிறிது நேரத்தில் இளம்பெண் மயக்கமடையவே அவரை பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து இளம் பெண்ணுக்கு மயக்கம் தெளிந்த நிலையில் நடந்ததை வாலிபர் கூற அவர் வீடியோவை டெலிட் செய்யுமாறு கேட்டுள்ளார். அதற்கு நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்பதால் உன்னுடன் உடலுறவு வைத்தேன் என்று கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து சிறிது நாட்கள் கழித்து இளம் பெண் வாலிபரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த வாலிபர் அந்த இளம்பெண்ணின் அத்தை மகனுக்கு வீடியோவை அனுப்பி வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வாலிபரிடம் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக இளம் பெண் ராஜபாளையம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்துள்ளனர்.