தக் லைப்’ திரைப்படத்துக்குப் பிறகு நடிகர் சிலம்பரசன், புகழ் பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். ‘எஸ்.டி.ஆர் 49’ படம், வடசென்னை பின்னணியில் உருவாகும் கேங்ஸ்டர் திரைப்படம் ஆகும். இது, வெற்றிமாறனின் ‘வடசென்னை’ படத்துடன் நேரடியாக தொடர்பில்லாதாலும், அதே காலகட்டத்திலும், அதே வட்டாரத்திலும் நிகழும் ஒரு புதிய கதையை மையமாகக் கொண்டு உருவாகிறது. இந்தப் படத்தில் நடிகர் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கப்பட்டன. இதனையொட்டி, நடிகர் சிலம்பரசனின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சிம்பு, இப்படத்தில் இளமை மற்றும் முதிய தோற்றத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது.
ஆளப்பிறந்த அரசன்
வெற்றியுடன் சிலம்பரசன்#VetriMaaran @SilambarasanTR_#STR49 #SilambarasanTR #VCreations47 #ARASAN pic.twitter.com/zLk8chzGJl— Kalaippuli S Thanu (@theVcreations) October 7, 2025
இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறனின் பிறந்தநாளையொட்டி, ‘எஸ்டிஆர் 49’ திரைப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதே நேரத்தில், ‘எஸ்டிஆர் 49’ படத்துக்கு ‘அரசன்’ எனத் தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. இதனை, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது எக்ஸ் (தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து, படத்தின் தலைப்புப் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். இந்த தலைப்புப் போஸ்டர் வெளியான சில நிமிடங்களுக்குள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இதற்கிடையே, படத்தின் தலைப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, நடிகர் சிம்பு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். மேலும் இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
