கடந்த வாரம் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில், ஒரு இளம் பெண் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்களையும், அதற்கிடையில் தன்னுடன் இருந்த மாமியாரின் தாய்மையான ஆதரவையும் பகிர்ந்துகொண்டார். தாய், தந்தை, தம்பி, கணவன் என அனைவரையும் இழந்து தனிமையில் தத்தளித்த வாழ்க்கையை விவரித்த அந்த பெண், “எல்லோரும் என்னை ராசி இல்லாதவள் என கூறினர். ஆனால் என் மாமியார் மட்டுமே எனக்கு ஆதரவாக நின்றார். என் மகன் இறந்தாலும் நீ என் வீட்டில் மகளாக இருக்க வேண்டும், உன் மூலம் நாங்கள் உயிர் வாழ்கிறோம் என கூறி எனக்கு தாயாக இருந்தார்” எனக் கூறியபோது, நிகழ்ச்சியில் இருந்த அனைவரும் உணர்ச்சியில் ஆழ்ந்தனர்.

அந்த பெண் மேலும், “எனது மாமியாருக்கு 75 வயது, அவருடைய பெயர் சண்முகம்மாள். 9 ஆண்டுகளாக திருமணம் ஆன பிறகும் குழந்தை இல்லாத எனக்கு இன்னும் நம்பிக்கை அளிப்பவர் அவர்தான்” எனக் கூறியபோது, நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் மனம் நெகிழ்ந்து உடனடியாக நீயா நானா வழங்க இருந்த டைமண்ட் வவுச்சரை வழங்கி, “இதனை உங்கள் மாமியார் சண்முகம்மாளுக்கு பரிசாக அளிக்கவும். அவர் உண்மையான தாய்” எனக் கூறி அந்த பெண்ணின் மாமியாரை கௌரவித்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாகி, “மனிதநேயம் இன்னும் உயிருடன் இருக்கிறது” என பலரும் கோபிநாத் அவர்களுக்கு பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.