இந்தியாவின் அசுர வேக ‘குவிக் காமர்ஸ்’ (Quick Commerce) டெலிவரி சேவை தற்போது உலக அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பண்டிகை காலம் ஒன்றில் வெளியில் செல்வதற்காகத் தகுந்த ஆடைகள் இல்லாததால், பிரிட்டனைச் சேர்ந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் இந்தியாவில் இயங்கி வரும் ‘பிளிங்கிட்’ (Blinkit) செயலியில் விளையாட்டுக்காக உடைகளை ஆர்டர் செய்துள்ளார்.
ஆனால், ஆர்டர் செய்த அடுத்த 3 நிமிடங்களிலேயே டெலிவரி பாய் ஆடைகளுடன் அவரது வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். மொபைல் செயலியில் இன்னும் டெலிவரிக்கு நேரம் இருப்பதாகக் காட்டிக் கொண்டிருந்த போதே, பொருட்கள் கைக்கு வந்ததைக் கண்டு அந்தப் பெண் வாய்விட்டுச் சிரித்ததோடு, இந்தியாவின் இந்த அசுர வேகச் சேவையை வியந்து பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
“பிரிட்டன் போன்ற உலகப் பணக்கார நாடுகளில் கூட 10 நிமிடத்திற்குள் இப்படி ஆடைகளை டெலிவரி செய்வதையெல்லாம் கற்பனை கூடச் செய்ய முடியாது; லண்டனில் இதெல்லாம் சுத்தமாக சாத்தியமே இல்லை” என்று அந்தப் பெண் தனது வீடியோவில் ஓப்பனாகப் பேசியுள்ளார்.
இந்தியாவில் இந்த டெலிவரி சிஸ்டம் மளிகைப் பொருட்களைத் தாண்டி துணிமணிகள் வரை நிமிடங்களில் டெலிவரி செய்யும் அளவுக்கு அசுர வளர்ச்சி அடைந்துவிட்டதாக அவர் பாராட்டியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோ தற்போது லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வைரலாகி வரும் நிலையில், “இதுதான் புதிய இந்தியாவின் வேகம்” என்றும், “சர்வீஸ் செக்டாரில் இந்தியா உலக நாடுகளையே பின்னுக்குத் தள்ளி வருகிறது” என்றும் நெட்டிசன்கள் கெத்தாகக் கமெண்டுகளைத் தட்டிவிட்டு லைக்குகளைக் குவித்து வருகின்றனர்.
