ஓடும் ரயிலில் பயணி ஒருவர் தூக்க கலக்கத்தில் அவசர கால அபாய சங்கிலியை (Emergency Chain) தவறுதலாக இழுத்ததால், அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ரயில் நடுவழியில் அவசரமாக நிறுத்தப்பட்ட விசித்திர சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ பதிவில், ரயிலின் மேல் படுக்கையில் பயணி ஒருவர் கையை உயர்த்தியபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்.
அப்போது, அவரது கை அங்கிருந்த ரயிலின் அபாய சங்கிலிக்குள்ளே சிக்கியிருந்ததோடு, அவரது உடலின் எடையால் அச்சங்கிலி கீழ்நோக்கி இழுக்கப்பட்டிருந்தது. இதனால், ரயிலின் அவசரகால பிரேக் இயங்கி, ரயில் திடீரென நடுவழியில் நின்றதால் உள்ளே இருந்த பயணியர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
According to the train passenger, he thought he was sleeping while holding his wife and he grabbed the stop handle and pulled it, stopping the train 😂😂😂🤣🤣🤣 pic.twitter.com/Q9LVKi2i9x
— Virendra Maurya (@VEERA_SIPF) May 26, 2026
ரயில் எதனால் நின்றது என்று தேடி வந்த ரயில்வே பாதுகாப்புப் படை ஊழியர்கள், குறிப்பிட்ட அந்தப் படுக்கைக்கு அருகில் வந்து பார்த்த போது, அந்தப் பயணி சங்கிலியைப் பிடித்தபடியே தூங்குவதைக் கண்டு தங்களது தலைகளில் கைகளை வைத்துக் கொண்டனர். எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டுள்ள தகவலின்படி, அந்தப் பயணி தான் வீட்டில் தனது மனைவியின் அருகில் தூங்குவதாக நினைத்து, தூக்க கலக்கத்தில் தவறுதலாக ரயிலின் சங்கிலியைப் பிடித்திழுத்ததாகக் கூறப்படுகிறது.
ஊழியர்கள் அவரை எழுப்பி விபரத்தைக் கேட்டபோது, அவர் தூக்க மயக்கத்திலேயே பதிலளித்துள்ளார். இச்சம்பவத்தை இணையவாசிகள் பலரும் நகைச்சுவையாகக் கடந்து சென்றாலும், அவசரகால சங்கிலிகள் தூங்கும் நபர்களின் கைகள் எளிதில் படும்படியான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது பாதுகாப்பற்றது என்றும், அதன் வடிவமைப்பை ரயில்வே நிர்வாகம் மாற்றியமைக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
