சென்னை பெரம்பூரில் நேற்று இரவு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி கண்டனங்கள் தெரிவித்துள்ளார். அந்த வகையில் தற்போது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கண்டனம் தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட ‌ செய்தி மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கிறது. இந்த துயரமான நேரத்தில் அவருடைய குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தொண்டர்கள் அனைவருடனும் தமிழக பாஜக கட்சி ஆறுதலாக துணை நிற்கும். நம்முடைய சமுதாயத்தில் வன்முறைக்கும் மிருகத்தனத்திற்கும் இடமில்லை. ஆனால் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் அது அதிகமாகிவிட்டது. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துவிட்டு முதல்வராக தொடரும் தார்மீக உரிமை இருக்கிறதா என்று ஸ்டாலின் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.