ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் மது பிந்தானி என்பவர் வசித்து வருகிறார். தின கூலியான இவருக்கு 17 வயதில் ஆஷா என்ற மகள் இருந்துள்ளார். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மது பிந்தானியின் மகள் திடீரென உயிரிழந்து விட்டார். சிறுமி இறந்த நிலையில் ஆம்புலன்ஸில் உடலை எடுத்துச் செல்ல அவரிடம் பணம் இல்லை.
அவருக்கு ஆம்புலன்ஸ் கிடைக்காததால் பிரேத பரிசோதனைக்காக மகளின் சடலத்தை 7 கிலோமீட்டர் தூரம் தள்ளுவண்டியில் கொண்டு சென்றுள்ளார். அவரது மகள் ஆஷாவுக்கு மனநல பாதிப்பு இருந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லுமாறு மது பிந்தானியிடம் கூறியுள்ளனர்.
தனியார் ஆம்புலன்ஸ் சேவை 1200 ரூபாய் கேட்ட நிலையில் 108 ஆம்புலன்ஸ் சடலங்களை எடுத்து செல்லாது என்று அவரிடம் கூறப்பட்டது. அவரிடம் பணம் இல்லாததால் பலரிடம் உதவி கேட்டார். ஆனால் ஒருவரும் உதவ முன் வராததால் கடைசியில் வேறு வழி இன்றி தன் மகளின் சடலத்தை தள்ளு வண்டியில் வைத்துக் கொண்டு சென்றார்.
ஒரு ஆட்டோ ஓட்டுனர் தான் அவருக்கு அந்த தள்ளு வண்டியை கொடுத்து உதவியுள்ளார். பிரேத பரிசோதனைக்காக மகளின் சடலத்தை எடுத்துச் சென்ற அவர் பின்னர் பிரேத பரிசோதனை முடிந்ததும் அதே வண்டியில் மீண்டும் தன் மகளின் சடலத்தை இறுதி சடங்கிற்காக வீட்டிற்கு எடுத்துச் சென்றார். மேலும் அவர் தன் மகளின் உடலை கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
