முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், பாரதிய ஜனதா கட்சியை கடுமையாகச் சாடிப் பேசினார். “ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது” என்ற பழமொழியை மேற்கோள் காட்டிய அவர், பாஜக காலடி எடுத்து வைக்கும் நாடு உருப்படாது என்று விமர்சித்தார்.

மேலும் தமிழகத்தில் தற்போது நடப்பது திமுக தலைமையிலான கூட்டணிக்கும், அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ சக்திகளுக்கும் இடையிலான இருமுனைப் போட்டி தான் என்றும், அதிமுக தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து மாறி மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், மத்திய அரசின் மொழிப் பாலிசி குறித்துப் பேசிய சிதம்பரம், தமிழ் மொழியின் வளர்ச்சியை விட சமஸ்கிருதத்திற்கு 17 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தி திணிக்கப்படுவதாகவும், இந்தி மொழிக்கு பல நூறு மடங்கு நிதி வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் அவர்கள் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் இல்லாத நேரத்தில் அவசர அவசரமாக நடத்துவது பாஜகவின் அரசியல் சூழ்ச்சி என்றும் அவர் தனது உரையில் பதிவு செய்தார்.