ஜெய்ப்பூரில் உள்ள பல இனிப்பு கடைகள், இந்தியா மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” என்ற இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக, தங்களது இனிப்புகளின் பெயர்களில் இருந்து ‘பாக்’ (Pak) என்ற சொல்லை நீக்கியுள்ளன. பாகிஸ்தானை நினைவுபடுத்தும் வகையில் ‘பாக்’ என்ற சொல் இருப்பது சரியல்ல எனக் கூறி, நாட்டுப்பற்றை கருத்தில் கொண்டு இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மொட்டிப் பாக், மைசூர் பாக், ஆம்பாக், கோன்ட்பாக் போன்ற இனிப்புகள் முறையே மொட்டி ஸ்ரீ, மைசூர் ஸ்ரீ, ஆம் ஸ்ரீ, கோன்ட் ஸ்ரீ என மாற்றப்பட்டுள்ளன.

இனிப்புகளின் பெயரில் உள்ள ‘பாக்’ என்ற வார்த்தை உண்மையில் சமஸ்கிருத வார்த்தையான ‘பகவா’ (Pakva) என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் “சமைக்கப்பட்ட” அல்லது “முதிர்ந்த” என்பதாகும். மேலும் இந்தி மொழியில் ‘பாக்’ என்பது சர்க்கரைத் திரவத்தைக் குறிக்கும். எனினும், ‘பாக்’ என்ற வார்த்தை பாகிஸ்தான் என்பதோடு ஒத்த ஒலியைக் கொண்டிருப்பதால், தற்போதைய தேசிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மக்கள் உணர்வுகளை மதித்து, பெயர் மாற்றம் செய்யப்படுவதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பான பதிவுகள் மற்றும் கடைகளின் அறிவிப்புகள் சமூக வலைதளத்தில் வைரலாகி பேசும் பொருளாக மாறி உள்ளது.